“வையத்து வாழ்வாங்கு வாழ்தல்” என்பது எல்லோருக்கும் எளிதல்ல. தனக்கென வாழாது தான் வாழ்ந்த சமூகத்திற்கும் பயனுடையவராய் வாழ்பவர்கள் காலம் கடந்தும் நினைவுகளில் அழியாது இருக்கிறார்கள்.
அவ்வாறு தான் அமரர் திரு வே.இராமர் அவர்கள் தான் வாழ்ந்த கிராமத்தின் மீது அன்பும் அக்கறையும் கொண்டு அதன் வளர்ச்சியில் தன்னை முழுமையாக இணைத்து செயல்பட்டு ஊர் மக்களால் என்றும் நினைவு கூரப்படும் அளவிற்கு தன் வாழ்வை அமைத்துக் கொண்டிருந்தார்.
அதன் காரணமாக தான் எழுத விரும்பிய நூலை தான் வாழ்ந்த கிராமத்தின் வரலாற்றுப் பதிவாக எழுத நினத்திருந்தார்.
அவர் வாழும் காலத்தில் அந்த நூல் வெளிவராதிருந்தாலும் அவரின் கனவை அவரின் இதயப் பதிவை அவரது பிள்ளைகள் இன்று நூலாக்கி இருக்கிறார்கள்.
இந்த நூலாக்கம் வெறும் அச்சு பிரதியாக நின்று விடுவதில்லை. இது ஒரு காலத்தின் வரலாற்று பதிவாக அமைந்திருக்கிறது.
தான் வாழ்ந்த கிராமத்தின் மீது கொண்ட அன்பினால் அந்த கிராமத்தின் வரலாற்றை, இந்த கிராமத்தினுடைய எழுச்சியை அதன் தொடக்க காலத்தில் இருந்தே இவர் எழுத முயன்றிருக்கிறார்.
கூட்டுறவுச் சங்கத்தின் தோற்றம், சந்தையின் ஆரம்பம், பாடசாலையின் ஆரம்பம் என ஊரின் முக்கியமான கட்டமைப்பு வேலைகள் எல்லாம் எவ்வாறு நடந்தன என்றும், அதில் தான் எத்தகைய பங்களிப்பை வழங்கினார் என்பதையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கின்றார்
வளர்ந்து வருகின்ற ஒரு கிராமம் பல இடர்பாடுகளைக் கடந்து எவ்வாறு முன்னேறி இந்த ஊர் மக்கள் விரும்பி உறையும் ஊராகத் தன்னை கட்டமைத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு இவரது இந்த நூல் சான்றாக ஆகிறது.
அது மட்டுமின்றி இது இனி வாழும் புதிய இளைஞருக்கும் சமூகத்தில் எவ்வாறு அக்கறையாக இருக்க வேண்டும், சமூக வளர்ச்சியில் எத்தகைய பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்பது மட்டுமன்றி அவர் மக்களால் காலம் காலமாக நினைவு கூரத்தக்கதாக தனது வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்த நூல் ஆதாரமாகிறது.
இவர் எனது உறவினர் என்ற வகையில் இந்த நூலுக்கு ஒரு நயவுரையை எழுதுவதில் நான் பெருமை அடைகிறேன். ஒரு மனிதனின் வாழ்வு அனைவர்க்கும் என்று ஆகும் போது அது பெருமை உடையதாகவும் காலத்தால் அழியாத நிலைப்பாடு உடையதாகவும் மற்றவர்களால் கொண்டாடப்படத்தக்கதாகவும் ஆகிவிடுகிறது.
ஒரு உதாரண புருசரின் நினைவாக வெளியீடு காண்கின்ற இந்த நூல் ஒரு கிராமத்தின் ஆரம்பக் கதையாக எல்லோரும் கருதலாம். சமூகத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவருக்கும் இந்த நூல் ஒரு துணை ஆதாரமாக அல்லது ஊக்க சக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
கட்டுரைக்கு வாய்ப்பு அளித்த அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
திரு. கந்தையா நவரத்தினம் (டாக்டர்)
நடன முருகன் வைத்திய நிலையம்
இல – 7 கஸ்தூரியார் லேன்
யாழ்ப்பாணம்