
பரந்து விரிந்திருக்கும் இந்தப் பூமியில் பிறந்தவர்கள் கோடிக்கணக்காகும். இறந்து போனவர்களும் கோடிக்கணக்கே, ஆயினும் மக்கள் மனதில் இன்னமும், இனிவரும் பரம்பரையினர் மனதிலும் நிறைந்திருப்பவர்கள் சிலரே. அவர்களுள்ளும் தமிழ் வளர்த்து நிலைத்திருப்பவர் மிகச் சிலரே. அந்நிய மொழியாளர்களும், தமிழின் இனிமை கண்டு தமிழ் வளர்த்தவர்களும் அடங்கலாகச் சில சான்றோர்கள் மட்டும் இன்னமும் இறவாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே. மனித இனம் சைகை மொழியிலிருந்து மாற்றம் பெற்று ஒலி வடிவிலான மொழி பேசிய காலத்திலிருந்தே வந்த, வளர்ந்த மொழியாம் தமிழ் மொழி வளர்க்க. அவ்வப்போது சான்றாண்மையாளர்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றனர். தமிழ் மொழியும், முழு இந்திய தேசமும் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்தவேளை தோன்றிய சுப்பிரமணிய பாரதியார் போல, சைவமும் தமிழும் நெருக்கடிக்குள்ளாகியிருந்த காலத்தில் அவதரித்த ஆறுமுகநாவலர், மறைமலை அடிகள். சுவாமி விவேகானந்தர், சுவாமி விபுலானந்தர் போல வந்து உதித்தவர் தனிநாயகம் அடிகள். தமிழ் மொழியை நன்கு கற்று உணர்ந்து தொடர்ந்து ஆராய்ந்து உலகத் தமிழினமே தமிழை நன்று அறியும் வண்ணம் தமிழ் ஆய்வு மையங்களை நிறுவி, இயக்கி உலக மொழிகளுள் தமிழே சிறப்பானது என்று நிறுவினார். இவர் ஆற்றிய சேவைகளிற்காக உலகம் இவரைப் பாராட்டிக் கௌரவித்துப் பல பட்டங்கள் வழங்கினாலும், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றுக்கூடாகப் பல மாநாடுகளை உலகமெங்கும் நடாத்திய பெருமைக்குரியவர் என்றே நன்கு அறியப் பெற்றார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்றதும் தனிநாயகம் அடிகளே மக்கள் மனதில் வருவார். இவர் ஒரு தமிழ் நாயகம். இவருக்குத் தேவையில்லை. சபாநாயகம். இவரொரு நடு நாயகம் ஆதலினால் இவர் தனிநாயகமாய் என்றும் திகழ்கின்றார்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதானது எங்கும் காணோம் எனப் பாரதியார். இந்தியாவின் குறிப்பாக இப்போது பல பிரிவுகளாகப் பிரிந்து வேற்றுமை காட்டிக் கொண்டிருக்கின்ற சிறிய சிறிய மாநிலங்களின் மொழிகளை அதிலும் தமிழோடு இணைமொழியான மொழிகளையும் அப்போது இருந்த சூழ்நிலையில் ஆங்கிலத்தையும், பிரெஞ் மொழியையும், சமஸ்கிருதம், மலையாளம், கர்நாடகம் என பல மொழிகளைக் கற்றுத் தெரிந்து தெளிந்து கூறினார். அவற்றுக்கும் மேலாகப் பல மொழிகளைக் கற்றதுடன் ஆய்வுகளும் மேற்கொண்டவர் பேராசிரியர் தனிநாயகம் அடிகள். வழமையாக உலகெங்கும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவே. அந்தந்த நாட்டு மக்களின் மொழியை அறிந்து கொள்வர். அவ்வாறு தமிழ் மக்களிடையே கிறிஸ்துவத்தைப் போதிக்க வந்த வெளிநாட்டு அறிஞர்கள், தமிழ்மொழியைக் கற்றவேளை, தமிழ் மொழியின் இனிமையையும், சிறப்பையும், செழுமையையும், உண்மை நிலையையும் கண்டு தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்தவர்கள் பலர். மறைமலை அடிகள், வீரமா முனிவர், றொபேட்கால்வெல் ஆகியோர் அவர்களுள் சிலராகும். ஆயினும் பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தாலும் மொழிவழி தமிழ் மகன் ஆனதால் தமிழ் வளர்க்கும் பணிக்காகவே துறவு கொண்டார்.
பொதுவாக இலட்சியக் கனவுகளுடன் தூரநோக்குக் கொண்ட சமூகப் பார்வையுள்ளவர்களின் எண்ணங்கள் நடைமுறைக்கு வருவதைக் கண்டுள்ளோம். அவ்வகையில் இந்திய மொழிகளுடன் ஆங்கிலமும், பிரெஞ்சும் அறிந்து வைத்திருந்த பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியதைப் பல்வேறு மொழிப்புலமை கொண்ட தனிநாயகம் அடிகள் நிறுவினார். அவ்வாறே ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே என 1919 இல் உணர்வு மேலீட்டுடன் பாரதியார் பாடினார். சரியாக 30 வருட தசாப்தங்களின் பின்னர் 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அடிமைத்தனம் அகன்றது. அவ்வாறே தமிழர் வாழ்வுடனும் 30 வருட காலம் ஒன்றி- யிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. இதே போலவே பாரதியார் வழி நின்று இந்தப் பாதிரியார் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பனிஸ், ஜேர்மன், கிரேக்கம், சமஸ்கிரதம், ருஷ்யமொழி, மலாய், போர்த்துக்கல், தமிழ், சிங்களம் எனப் பல மொழிகளைக் கற்றுத் தெளிந்த பின்னர் தமிழ் மொழி இனிமையானது என்கிறார். சீர்தூக்கிப் பார்க்கப் போதிய அறிவும் திறமையும் கொண்ட இவர் கூற்று ஏற்புடையதே. அதனாலேயே இவர் நடுநாயகமாகத் திகழ்கின்றார்.
பயின்ற மொழிகளுக்குள்ளும் சிறப்பான, அச்சேறாது இருந்த நூல்களைப் பதிப்பித்ததுடன், வெளிநாட்டு நூலகங்களில் சுவடிகளாகக் காணப்பட்ட தமிழ் நூல்களையும் அச்சேற்றி வெளியிட்டார். “சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பதற்கு” இணங்க பிறமொழி இலக்கியங்களைத் தமிழ்மொழியில் மாற்றி எழுதினார். தமிழ் மொழியின் சிறப்புக்களைச் சான்றாதாராங்களுடன் நிறுவியதால், கற்றறிந்த வித்தகர்கள் பாராட்டி ஒன்றிணையவே உலகத் தமிழ் ஆராய்ச்சிமன்றை 1961ம் ஆண்டு முதல் மலேசியாவில் பேராசியராக இருந்த காலத்தில் நிறுவி, உலகம் எங்கும் தமிழ் ஆய்வு மகாநாடுகளை நடாத்தவும், அழிந்து போகும் நிலையிலிருந்த அரிய தமிழ் நூல்களையும், அகராதிகளையும் மறுபதிப்புச் செய்யவும் வழிகோலினார்.
இவ்வாறு இவரால், அமைக்கப் பெற்றதும் இவர் செயலாளாராகப் பணியும் ஆற்றிய இவ் ஆய்வு மன்று மூலமாக மலேசியாவின் கோலாலம்பூரில் 1966ம் ஆண்டில் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்தக் காரணமுமாக இருந்தார். தொடர்ந்து 1968ம் ஆண்டு சென்னையிலும் 1970ம் ஆண்டு பிரான்ஸ் நகரிலும், 4 வது தமிழாராய்ச்சி மகாநாட்டை 1974ம் ஆண்டு இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் நடாத்தினார். சிறுபான்மையினர் பேசும் மொழிக்கு ஒரு ஆய்வு மாநாடா என்ற காழ்ப்புணர்வில் பல தடைகளைப் போட்ட போதிலும், அத்தனையும் தகர்த்து மாநாட்டை நடத்திய வேளை பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஆய்வாளர்கள் கலந்து கொண்டு 200ற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. உள்ளூர் வெளியூர் ஆய்வாளர்களுடனும் கலைஞர்களுடனும் அக்காலத்தில் யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் தலைமையில் சிறப்பாக நடைபெறுவது கண்ட அரச படையினர் வெகுண்டு எழுந்து குழப்பங்கள் ஏற்படுத்திப் பத்துத் தமிழ் உணர்வாளர்கள் உயிர் இழக்கவும் மேலும் பலர் காயமுறவும் காரணமாயினர். இது கண்டு மிகவும் மனம் வருந்திய அடிகள் சோர்ந்து விடாமல், துவண்டு போகாமல் 5வது மாநாட்டை 1981இல் இந்தியாவின் மதுரையில் நடாத்துவாதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்த நிலையில் 1980 ஆண்டு மறைந்தார். எனினும் அவர்திட்டமிட்டபடி 1981ம் ஆண்டு மகாநாடு மதுரையில் நடைபெற்றது. தொடர்ந்து 1987 இல் மீண்டும் மலேசியாவிலும், 7வது மாநாடு 1989 இல் மொரிசியசிலும், 1995ம் ஆண்டு தஞ்சாவூரிலும், 2015ம் ஆண்டில் 3வது முறையாக கோலாலம்பூரிலும், 10வது மகாநாடு அமெரிக்கச் சிக்காக்கோ நகரிலும், 2019 இல் நடைபெற்றது. இலட்சியவாதிகளின் கனவுகள் கனவாகிப் போவதில்லை. 5வது மாநாடு நடைபெற்ற வேளை தமிழ் வளர்த்த இப்பெரியாருக்கு நினைவுச்சிலை அமைக்க வேண்டியும் ஏற்பட்டது. தமிழ் சமூகம் துன்பத்தில் மூழ்கியது. நெடுந்தீவு மக்களும் பெரியாரின் சேவைகளைக் கௌரவித்து நினைவுச்சிலை அமைத்துப் பேணி வருகின்றனர். 1981இல் யாழ் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டமும் வழங்கிக் கௌரவித்தது. ஆயினும் தமிழ்த்தூதுவர் தனிநாயகம் அடிகளார் என்றே தமிழ்ச்சமூகம் வியந்துரைக்கின்றனர்.
வளர்ந்து வந்து இவ்வாறான சாதனைகளைப் புரியவென ஊர்காவற்துறையின், கரம்பொன் கிராமத்தில் கிறிஸ்தவப் பெற்றோர் ஸ்ரெனிஸ் லங் கணபதிப்பிள்ளை அவர்கட்கும் செசில் இராசம்மா பஸ்தியாம்பிள்ளை அன்னை அவர்களுக்கும் 2.8.1913ம் ஆண்டு மூத்த மகனாகப் பிறந்தார். குடும்பத்து மூத்த ஆண் பிள்ளையை குருத்துவக் கல்வி கற்க வைத்துப் பாதிரியார் ஆக்கும் குடும்பக்கலாசாரம் கொண்டிருந்த போதும், கல்வி கற்க விரும்பிய இவர் குருத்துவக் கல்விக்குச் செல்ல மறுத்து ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் இணைந்து ஆரம்பக் கல்வியையும், உயர்கல்வியை யாழ்ப்பாணம் சென்ற் பற்றிக்ஸ் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார். 17வது வயதில் சீனியர் கேம்பிரிஜ் தேர்வில் சித்தியடைந்த பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கலைமாணி, முதுகலைமாணிப் பட்டங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர். குருவானவராகப் பயிற்சி பெற உரோமபுரி சென்று கற்று 1939இல் இறையியல் கலாநிதிப் பட்டமும் பெற்றுக் கொண்டார். இவ்வாறு தான் அமையும் 67631 எங்கோயோ எப்பொழுதோ எழுதப்பட்டபடி எல்லாம் நிகழ்ந்தேறவே கட்டுப்பாடுகளையும், வழமைகளையும் தகர்த்துக் கொண்டு வளர்ந்து வந்தார். வழமையாகக் கிறிஸ்துவ மதத்தை விஸ்தரிக்கவென வரும் பாதிரிமார் அந்த அந்த மக்களின் மொழிகளைக் கற்றுக்கொள்வாராயினும் இவர் சென்ற நாட்டு மொழிகள் அனைத்தையும் கசடறக் கற்றார். சமய பாதிரியாராக. ஆசிரியராக, பேராசியராக, ஆய்வாளர், சிறந்த மேடைப் பேச்சாளர், நல்ல படைப்பாளியாகவும் உயர்ந்து “தமிழ்த்தூது” தனிநாயகம் அடிகளானார்.
தமிழ் மொழி அறிவும், தமிழ்ப் பற்றும் கொண்ட அடிகளார் உலகில் தான் சென்ற நாடுகளிலெல்லாம் தமிழையும் அந்தந்த நாட்டின் பாடத்திட்டத்தில், ஒரு பாடமாகச் சேர்த்துக் கொள்ள வழிவகுத்ததுடன், ரோமபுரியில் கற்றுக் கொண்டிருந்த காலங்களில் வீரமாமுனிவர் கழகத்தை உருவாக்கி தமிழோசை உலகெலாம் பரவிச் செல்லவும் வகை செய்தார். இன, மத, மொழி, தேச வேறுபாடுகளின்றி தமிழ் மொழியின் பண்பாட்டியலையும், கலாசாரம், நாகரீகம் போன்றவற்றையும் எடுத்துக்கூறி தமிழ்மொழி பேசுபவர்களின் அறநெறி வாழ்வையும், பண்பாட்டு இயலையும் உலகறியச் செய்தார். இவரது தீவிர தமிழ் மொழிப்பற்று, உலக மொழிகளில் இருந்த ஞானம், மொழி ஆய்வு, ஆற்றல், ஒப்பியல், நடுநாயகம் என்பன தமிழ் மொழி போல இனிதானது எங்கணும் இல்லை என்று ஆணித்தரமாகக் கூற முடிந்தது, நிலை நிறுத்த முடிந்தது. வசதிகள் குறைந்த கிராமங்களில் பிறந்தாலும் இளைஞர் யுவதிகளும் இவரைப் பின்பற்றுவோர்களும், விடாமுயற்சியும், கூர்ந்து அவதானிக்கும் திறனும், பகுத்துணர்ந்து ஏற்றுக் கொண்டு அதன் வழி நடந்தால் வளர்ந்து எழலாம் என வாழ்ந்து காட்டியவர்.
1951ம் ஆண்டு தமிழ் எழுச்சி விழாவில் கலந்து கொண்ட இவர் ஆங்கில மொழியை வணிகத்தின் மொழி எனவும், இலத்தீன் சட்டத்தின் மொழி, கிரேக்கம் இசையின் மொழி, இத்தாலி காதலின் மொழி, பிரெஞ்சு தூதின் மொழி எனவும் வகுத்துக்கூறி, தமிழ் இணக்கத்தின் மொழி, அன்பின் மொழி, இரக்கத்தின் மொழி, பக்தி மொழி எனவும் ஆணித்தரமாக எடுத்துக் கூறினார். பல்வேறு மொழிகளை அறிந்திருந்தமையாலன்றோ இவ்வாறு பகுத்துக்கூறவும் துணிந்து கூறவும் முடிந்தது. இதனால் உலக மக்களின் ஆன்மீகச் சிந்தனைக்கும், அறநெறி வாழ்வு முறைக்கும், இயற்கை உணவு முறைகளுக்கும் மாறி வருகின்றனர். தன் ஊன் பெருகுவதற்கு பிற உயிர்களைக் கொன்று உண்ணும் வாழ்க்கை முறையிலிருந்து மாறிவருவதுடன் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவக் குளிகைகளை விட்டு மூலிகை வைத்திய முறைமைக்கு மாறி வருகின்றனர். இக்காலப் பகுதியில் தமிழ்த்தூது என்ற நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். அத்துடன் தமிழர் பண்பாடு நேற்றும் இன்றும் ஒரு உலகம், திருவள்ளுவர். ஒழுக்கவியலில் திருக்குறள் போன்ற தமிழ் நூல்களையும் பல ஆங்கில நூல்களையும் வெளியிட்டார். இவை யாவும்
தமிழரின் பெருமையை எடுத்துக்கூறுவனவாக அமைந்ததால் தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகள் என அழைப்பார்கள்.
1883ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சிக்காக்கோ நகரில் மதச் சீர் திருத்தங்கள் அவசியமானவை என்றும், அன்பையே போதிக்கின்ற எல்லா மதங்களும், மதப்பிரிவுகளும் முரண்பட்டு நிற்கின்ற குழப்பங்கள் விளைவிக்கின்ற மதங்கள் போதிக்கின்ற அன்பையும் அறிவையும் தெளிவுபட எடுத்துக்கூறி, உலகப் பொதுமதம் என்றொரு அன்பு மதத்தைப் பின்பற்ற உலக மக்கள் அனைவரையும் இணைத்தது போல், யப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இவர் சொற்பொழிவுகள் ஆற்றியதுடன், அவற்றைத் தொகுத்து தமிழர் கலாசாரம் (Tamil Culture) என்ற நூலை 1952 ஆம் ஆண்டளவில் வெளியிட்ட போது பேராசிரியர்கள் பலரும் ஆய்வு ஆக்கங்களை தந்து உதவினர். பதினைந்து வருட காலம் இந் நூல் வெளிவந்து, இப்போதும் “தமிழியல்” எனும் நூலாக தொடர்ந்தும் தமிழாய்வு மையத்தினரால் அரை ஆண்டு இதழாக வெளி வருவது இவரது பணிகள் அறம் சார்ந்திருந்தமையாலேயாகும்.
“என்னை நன்கு இறைவன் படைத்தனன் தன்னை நன்கு தமிழ் செய்யுமாறே” என்றதைக் கொண்டு தமிழர் பண்பாடு என்ற நூலுடன், பண்பாடு நேற்றும் இன்றும், தமிழர் தூது, ஒரே உலகம் போன்ற நூல்களுடன் பல வேற்று மொழி இலக்கியங்களையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். தமிழில் தலைசிறந்த நூல்களாகிய திருவாசகம், திருக்குறள் போன்ற நூல்களை பல பிற நாட்டு மொழிகளில் மொழிபெயர்த்து தமிழுக்கு பெருமை சேர்த்தார். அந்நிய மொழிகளில் இருந்த இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதி பாரதியாரின் “சென்று வாருங்கள் எட்டுத்திக்கும் கலை பொக்கிஷங்கள் யாவும் கொணர்ந்திடுவீர் இங்கு” என்ற இலட்சியக் கனவை நனவாக்கினார்.
உலகெல்லாம் சுற்றி வந்த – வாழ்ந்த இவரை உங்கள் ஊர் எதுவெனக் கேட்டால் யாழ்ப்பாணம் என்றும், சமயத்தை கேட்டால் கிறிஸ்தவம் என்றும், உங்கள் மொழி எதுவெனக் கேட்பின் தமிழ் மொழி எனத் தயங்காமல் கூறுவார். இரு தமிழ் மொழி பேசும் தமிழர்கள் சந்திக்கும் வேளையில் “குட் மார்னிங்” (Good Morning) எனக் கூறிக் கைகுலுக்கும் பண்பாட்டை கடைபிடிப்பவர் காலத்தில், சமூகத்தில் எழுந்து நின்று “வணக்கம்” என சொல்வதற்கும், “எப்படி உள்ளீர்கள்” எனக் கூறி வரவேற்பதற்கும் தனித் தைரியம் வேண்டும். பன்மொழிப் புலமை கொண்டிருந்தும் தமிழ் மொழியையே பேச்சு மொழியாக கொண்ட இவரை இன்றைய தலைமுறை பின்பற்ற வேண்டும். எமது அன்னை மொழியை நாம் உரிய இடத்தில் முன் வைக்க வேண்டும். அதனால் தான் மூதறிஞர் “ராஜாஜி”, தனிநாயகம் என்ற பெயரை கேட்டாலே எல்லா நேரமும் நான் கவரப்படுகின்றேன் என்று கூறினார். ஆயிரம் சுலோகங்கள் ஓதிக்கொண்டு இருப்பதை விடவும் செயற்படத் துணிந்து எழுந்தால், இனம் எழுந்து விடும், என்பதைக் கருத்தில் கொண்டு தனியே எழுந்து தற்துணிவுடன் அறிஞர்களையும், ஆர்வலர்களையும் இணைத்து தமிழ் ஆராய்ச்சி மையத்தை உருவாக்கித் தமிழ் வளர்த்த பெரியார் 1980 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் முதலாம் தேதி இறைவனடி சேர்ந்தார். ஈழநாடு தன் ஒப்பற்ற தலைவனை இழந்தது. தமிழ்த் தாய் தன் ஒப்பற்ற அறிவு மகனை இழந்தாள். தமிழுலகம் உலகெல்லாம் தமிழ் வளர்த்த தமிழ்த்தூதனை இழந்தது. இவர் தனிநாயகம் சீர்தூக்கி பார்க்கச் சபாநாயகம் ஒன்று தேவையில்லை. இவரது நடுநாயகமான தீர்மானங்களுக்காகவும் வழி நடத்தலுக்காகவும் தமிழ் பேசும் மக்கள் மனதில் என்றும் நிறைந்து இருப்பார். தமிழ் பயின்று சமயம் வளர்க்கவென வந்து தமிழால் ஈர்க்கப்பட்டு தமிழனாக மாறி தமிழ் வளர்த்த பல வெளிநாட்டு அறிஞர்களைக் கண்ட நாடு இது. ஆயினும் தமிழராகப் பிறந்து சமயம் வளர்த்துக் கொண்டு தமிழராய் வாழ்ந்தவர். தமிழுக்கு செய்த தொண்டுகளுக்காக தனிநாயகம் அடிகளாக உயர்ந்து நிற்கின்றார். பழமைகளை வசதியாக இலகுவில் மறந்து விடும் நாங்கள் பொய்யும் புனைவும் கற்பனைகளும் மிகுந்து கட்டாயப்படுத்தி திணிக்கும் வரலாறுகளுக்கு மேலாக எமது வீர வரலாறுகளை நமது பிள்ளைகளுக்கு கடத்த வேண்டும். அறம் சார்ந்த வீர புருஷர்களாக அவர்கள் எழ வேண்டும். அறநெறிகள் இள வயதில் இருந்தே கற்றுத் தர வேண்டும். வேகமாக ஓடும் உலகில் நாமும் உலகமாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் ஓரங்கட்டுப்பட்டு விடுவோம். தொன்மையான மொழி. இறைவன் படைத்த மொழி, அறிஞர்கள் வளர்த்த மொழி அழியாது என்றும் வீணே காலத்தை கழியாமல் எழுவோம். விரைவாக எழுவோம் முன்னே அவர்கள் காட்டிய வழியில் நாமும் உயர்வோம் வெல்வோம்
கந்தையா மயில்வாகனம்
கந்தையா கனகம்மா நிதியம்
மறுமொழி இடவும்