“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்”
ஆம் மகனாகிய மோகன் அவர்கள் தனது தந்தையாகிய இராமு சேர் அவர்களுக்காக, அவருடைய கனவுகளை நனவாக்கும் பொருட்டு எடுத்திருக்கும் முயற்சியில் நூல்வடிவம் பெறுகின்றது வரலாற்று ஆவணம் ஒன்று. அதுதான் இராமு sir என்ற நூல். இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்குவதற்கும் எனக்கும் தொடர்புண்டு.
1978ம் ஆண்டு 06ம் மாதம் 8ம் திகதி தொடக்கம் 1984ம் ஆண்டு தை மாதம் வரை கைதடி நாவற்குழி கிராம மக்களுடன் ஏற்பட்ட தொடர்பு இன்று வரை நீடித்து நிலைத்து நிற்கின்றது. பல கல்விமான்களை உருவாக்கிய, உருவாக்கிக் கொண்டிருக்கின்ற கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலையில் தான் எனது ஆசிரியப்பணி தொடங்கியது. அன்று தொடக்கம் இன்று வரை இராமு sir இன் தொடர்பும் இருக்கின்றது. பாடசாலைக்கு நியமனம் பெற்றுச் சென்றவேளை இராமு sir இன் கையெழுத்தில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தமையை அங்குள்ள சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் அவதானித்தேன். பொதுவிடயங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கிய மக்கள் கூட்டம் அங்கே இருப்பதை அவதானித்தேன். இராமு sir அவர்களின் பிள்ளைகள் எங்களிடம் கல்வி கற்றார்கள். தந்தையைப் போன்று பண்புள்ளவர்களாகவும், விவேகமுள்ளவர்களாகவும் காணப்பட்டனர். நான் ஆசிரியராகக் கடமையாற்றிய வேளை தற்போது கல்வியற் கல்லூரியின் ஓய்வு நிலை விரிவுரையாளராக இருக்கின்ற திரு இ.கமலநாதன் அவர்களும் தொண்டர் ஆசிரியராகச் சேவையாற்றிக் கொண்டிருந்தார். இராமு sir அவர்கள் வெளிமாவட்டத்தில் கடமையில் இருந்தபோதும் அடிக்கடி பாடசாலைக்கு வருகை தந்து தன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாடசாலையின் வளர்ச்சி பற்றிக் கலந்துரையாடிச் செல்வார். கைதடி நாவற்குழி தெற்கு கிராமத்தின் வளர்ச்சியில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களை குறிப்பிட்டுச் செல்வார். நான் 1984 இல் பாடசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவேளை எனது பதில் அதிபர் கடமைகளை இராமு sir அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டார். அதிபராகக் கடமையேற்ற அவர் சிறப்பான பணிகளை மேற்கொண்டார்.
ஓய்வு பெற்ற போதும் தனது கிராமம் என்ற உணர்வு அவரிடம் மேலோங்கி இருந்தது. கிராமத்தின் வரலாற்றை எழுதி இளம் சந்ததிக்கு கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் காணப்பட்ட அவர் “கந்தையா கனகம்மா” நிதிய காப்பாளர் திரு.க.மயில்வாகனம் ஐயாவுடனும், என்னுடனும் விரிவுரையாளர் கமலநாதனுடனும், அதிபர் திரு.பி.முத்துலிங்கம் அவர்களுடனும் தொடர்புகளை மேற்கொண்டிருந்தார். அவரின் திடீர் மறைவால் அவர் பணி தடைப்பட்டது. அந்த நேரத்திற் தான் நான் நோர்வே சென்றவேளை அவருடைய மகன் மோகன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மோகன் அவர்கள் தந்தையின் பணியைத் தொடர விருப்பம் தெரிவித்தார். இது இராமு sir செய்த பெரும் பாக்கியம். இதன் பயனாக இந்நூல் இன்று வெளிவருகின்றது. இதற்கு வாழ்த்துரை வழங்குவதில் பெருமகிழ்வடைகின்றேன். எண்ணங்கள் உயர்வானால் அது இறையருளால் நிறைவேறும். தந்தையின் அவாவை நிறைவேற்றி வைக்கும் அவர் தம் அன்பு மகன் மோகனும், அவருடைய அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவதோடு இராமு sir அவர்களின் எண்ணம் ஈடேறுவதன் மூலம், அவரின் தூய ஆன்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கின்றேன்.
வாழ்க வையகம் வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
திருமதி வசந்தாதேவி மேகலிங்கம்
ஓய்வுநிலை அதிபர்