ஈழமணித் திருநாட்டின் வடபால் அமைந்துள்ள தென்னஞ்சோலைகளும் வயல்கள் நிறைந்ததும், தெற்குப் பக்கமாக கடற்கரையும் தன்னகத்தே கொண்டதும். மேற்குப் பக்கமாக அருளை வழங்கும் கண்ணகை அம்மனும், கிழக்குப் பக்கமாக கருணையை அள்ளி வழங்கும் காத்தற் கடவுளாம் கண்ணனும், தான் தோன்றியாக விளங்கும் பெரும்படை வைரவர் அம்மனும், ஆலயங்களும் நிறைந்த கைதடி நாவற்குழி எனும் அழகிய கிராமமதில் ஸ்ரீமான் ஆண்டி வேலுப்பிள்ளையும் மனைவி (சின்னத்தம்பி) சின்னப்பிள்ளையும் செய்த தவத்தின் பயனாக நான்கு பிள்ளைகளில் இளைய மகன் சுந்தரவதனன் இராமர் என்னும் நாமத்துடன் வந்துதித்தனன். 24.04.1940 இவரது பிறந்த திகதி. இளமைப் பருவத்தில் சகோதரங்களுடன் கூடிக் குலாவி வரும் வேளையில் ஆரம்பக் கல்வியை கோவிலாக்கண்டி மகாலட்சுமி வித்தியாலயத்திலும், மறவன்புலோ சகலகலாவல்லியிலும், கைதடி G.M.S ஆங்கில பாடசாலையிலும் தொடர்ந்து சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் பயின்றார். பின்னர் நல்லூரில் உள்ள ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியை முடித்து வெளியேறிய தருணத்தில் தகப்பனை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.
சிலரின் எதிர்ப்புக்கு மத்தியில் பாடசாலை ஆரம்பிக்கும் பணி தொடங்கி முயற்சியும் கைகூடி பின்னர் அரச அங்கீகாரம் பெற்றது. தனது ஆசிரியப் பணியை ஆசிரிய மாணவனாக கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலையில் ஆரம்பித்தார். வாலிப வயதை எட்டியதும் அண்ணன் பொன்னம்பலமும், நடராசா கதிரமலையும் இணைந்து கொழும்புத்துறையைச் சேர்ந்த செல்லையா தம்பதிகளின் புதல்வி பரமேஸ்வரியைத் திருமணம் செய்து வைத்தனர். தொடர்ந்து ஆசிரியராக பதவி ஏற்ற பின்னர் வெளி மாவட்டத்திலுள்ள கண்டி புசல்லாவை மகாவித்தியாலயத்திலும், மன்னார் கள்ளியடி அ.த.க பாடசாலையிலும் உதவி அதிபருமாக பணியாற்றி வந்தார். பின்னர் கைதடி முத்துக்குமாரசாமி வித்தியாலயத்தில் உதவி அதிபராக இருந்த வேளை கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலைக்கு அதிபராக பதவி உயர்வு பெற்று வந்து கடமையாற்றிய வேளை, நாட்டில் வன்செயல் காரணமாக இடம்பெயர்வுக்குள்ளாகி குடும்பத்துடன் கிளிநொச்சியில் குடியேறினார்.
கிராமத்தில் இருந்தவேளை சனசமூக நிலையம், கிராம முன்னேற்ற சங்கம், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், கடற்றொழில் கூட்டுறவுச்சங்கம் என்பவற்றில் அதிக ஈடுபாடு கொண்டு செயலாற்றியுள்ளார். இக்கிராமத்தில் ஆலயத்துக்கு 1985 இல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு ஸ்ரீமகாவிஷ்ணு பெரும்படை ஆலயம் என்னும் பெயரிட்டு திறம்பட நடாத்தி வந்தார். கிராமத்துக்கு மின்சார வசதி பெறுவதற்கு தனஞ் செயனுடன் சேர்ந்து கருமமாற்றி மின்சாரத்தை பெற்றுக் கொடுத்தார். ஆண்டு 5 வரை இருந்த எமது பாடசாலையை ஆண்டு 8 வரை தரமுயர்த்தி பின்னர் ஆண்டு 11 வரை தரமுயர்த்த முன்னின்று உழைத்தார். அக் காலகட்டத்தில் மூத்த சகோதரன் பொன்னம்பலம் பக்கபலமாக சகலவழிகளிலும் உறுதுணையாய் இருந்து உதவி செய்தார்.
இவருக்கு நான்கு பெண்களும் இரண்டு ஆண்களுமாக ஆறு பிள்ளைகள் வந்துதித்தனர். 1996ம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் பாடசாலை அபிவிருத்தி, சனசமூக நிலையம், கிராம முன்னேற்றச் சங்கம், பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம், கிராமத்தின் அனைத்து நிர்வாகத்திலும் பணியாற்றி அளப் பெருஞ்சாதனையை நிலை நாட்டினார். ஸ்ரீமகாவிஷ்ணு பெரும்படை ஆலயத்தின் நிர்வாகியாக இருந்து இறுதிவரை ஆலயத் தொண்டே உயிர் மூச்சென காலத்தை நகர்த்தி தேவார பாராயணங்களை ஓதி திருக்கல்யாண ஊஞ்சற்பாட்டை இயற்றி பாடியும் வந்தார். இறுதியில் 2023 இரண்டாம் மாதம் எட்டாம் திகதி திருதியை திதியில் நல்லான் இராமர் இறைபதம் அடைந்தார்.
திரு. இ.கந்தசாமி
கைதடி நாவற்குழி தெற்கு