நான் அறிந்த இராமு வாத்தியார்

எனக்கு இராமு வாத்தியார் மீது அளவு கடந்த மதிப்பும். மரியாதையும், பற்றும், பாசமும் எனை அறிந்த காலத்தில் இருந்தே இருந்தது என்பதை நன்றாக நான் அறிவேன். எனக்கும் அவருக்கும் பல விடயங்கள் ஒற்றுமையாக இருப்பதை எண்ணிப் பார்க்கின்றேன். நானும் அவரும் ஒரே ஊரில் பிறந்தோம். வாத்தியாரின் தாயாரும். எனது தாயாரும் மிக நெருங்கிய இரத்த உறவினர். இருவரும் ஒரே திகதியில் (24) பிறந்தோம். இருவரது முதல் நியமனமும் கண்டி புசல்லாவை சரஸ்வதி வித்தியாலயமாகும். இருவரது திருமண பந்தமும் கொழும்புத்துறையுடன் தொடர்புபட்டதாகும். இருவரது பெயரும் கூட மகாவிஸ்ணுவுடன் தொடர்புபட்டதாகும். கைதடி நாவற்குழி அரசினர் பாடசாலையில் ஒன்றாகக் கற்பித்த காலத்தில் எமது ஊரில் கல்வி, கலை, கலாசார, சமூக அபிவிருத்தி தொடர்பாக ஒரு தளத்தில் நின்று நேர் சிந்தனையோடு செயற்பட்டிருக்கின்றோம். அவ்வகையில் எனக்குத் தெரிந்தவற்றை இந் நூலின் ஊடாகப் பகிர்கின்றேன்.

வாத்தியாரும் ஊரும் உறவும்…

ஒருவரின் சிறப்பான வாழ்வும் வளமும் அவர் பிறந்த ஊரிலும் உறவிலும் பெரிதும் தங்கியுள்ளது என்பது அனுபவ உண்மை. சங்க காலத்தில் சிறப்புற்றிருந்த இருவகை நிலங்களில், வயலும் வயல் சார்ந்த மருத நிலப்பண்புகளும், கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப்பண்புகளும் ஒருங்கே அமைந்து காணப்படும் கோயிலாக்கண்டி தற்போதைய கைதடி நாவற்குழி தெற்கில் வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியரின் மகனாகப் பிறந்து பெற்றோர்க்குப் பெருமை சேர்த்தார். கோயிலாக்கண்டி என்ற பெயரின் அர்த்தத்தைச் சிறுவயதில் என் தந்தையாரைக் கேட்ட போது அவரின் விடையானது இப்படியாக அமைந்தது. அதாவது கோயில்கள் பலவற்றை உருவாக்கிய தலம் என்பது மிகப் பொருத்தமானதாகவே அமைந்தது. கோயிலும், சுனையும். கடலுடன் சூழ்ந்த கோயிலாக்கண்டி வாத்தியார் பிறந்த ஊர் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.

ஒரு சகோதரன் இரு சகோதரிகளுடன் கூடிப் பிறந்து தம் குடும்பம் குதூகலிக்க மிகச் சிறப்புடன் வாழ்ந்து வந்தார். மணவாழ்வில் தன் அருமை மனைவியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து தம்மைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக வாழ நல்ல பல காரியங்களை ஆற்றியுள்ளார். தன் அன்பு மனைவிக்கு ஏற்ற கணவனாய் மற்றவர்கள் பார்த்துப் பின்பற்றி வாழக்கூடியதான வாழ்க்கை அவருக்கே உரியது. சுருக்கமாகச் சொன்னால் இராமாயணத்தின் நாயகன் இராமராகவே வாழ்ந்து காட்டினார். தன் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த அப்பாவாக வழிகாட்டினார்.

வாத்தியாரின் கலைத்துவம்

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சேர்ட் தான் அவரது தேசிய உடை. எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்து இவ் வெண்மையான கோலத்தையே கண்டு வந்துள்ளேன். பின்னாளில் அவரது தலைமயிரும் வெள்ளை வெளேரென்று பிரகாசித்தது. அவரது உயர்ந்த உள்ளத்தைப் போல. எண் சோதிடத்தில் ஆறாம் நம்பரைப் பற்றிக் கூறுகையில், கலைகளின் பிறப்பிட இலக்கம் எனக் குறிப்பிட்டுள்ளதைப் போல் நல்ல கலைஞனாக, கலா ரசிகனாக விளங்கினார். பண்ணோடு பதிகங்களைப் பாடும் போது கல்லும் கசிந்து உருகுமாப் போல் உணர்ச்சி வெளிப்பாடு இருக்கும். அவர் குரலோசை இன்னும் எமது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. பாடசாலைக் காலங்களில் நாடகம், வில்லுப்பாட்டு, பட்டிமன்றம் என்பவற்றை அற்புதமாகத் தயாரித்து மேடையேற்றியுள்ளார். வாத்தியாருடன் இணைந்து பணியாற்றிய காலங்களில் நான் நாடகங்கள் மேடையேற்ற மிகவும் ஒத்தாசை புரிந்தார். நாடகப் போட்டிகளில் எமது பாடசாலை சென்ற இடமெல்லாம் வெற்றிவாகை சூடிவர அவரின் அயராத உழைப்பு பெரும் துணை புரிந்தது. தொல்புரத்தில் வாழ்ந்த நண்பர் “காவடிச் சுப்பர்” எனப்படும் சுப்பிரமணிய வாத்தியாரை அழைத்து வந்து பாடசாலையில் ஹார்மேனிய இசைக்கூடாக காவடிப் பாடல்களைப் பிள்ளைகளுக்குப் பயிற்றுவித்தார். இது தொடர்பாக இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

இராமு வாத்தியாரின் சமூகப் பணிகள்

நாடென்ன செய்தது உனக்கு? என்று கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு? என நினைத்தால் நன்மை உனக்கு… எனும் திரைப்பாடல் வரிகளின் கருத்துக்கு அமைவாக ஊரின் அபிவிருத்திக்குப் பல நன்மைகளைச் செய்திருக்கின்றார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதனைச் சிந்தையில் தாங்கி மக்களுக்காக அளப் பெரும்  சேவைகளைச் செய்து மகிழ்ந்திருக்கின்றார்.

காணுமிடமெல்லாம் கல்லுகள் நாட்டிக் கோயிலாக, கிராமிய வழிபாடாக வழிபட்ட மக்களின் பக்தி மார்க்கத்தில் ஆகம விதிகளை முறைப்படி பின்பற்றி பிராமணர்களின் பூசை வழிபாட்டினைத் தொடங்கிய பெருமை வாத்தியாரையே சாரும். இச் செயற்பாட்டினூடாக அவர் இரண்டு நன்மைகளை எதிர்பார்த்திருந்தார். ஒன்று பெரும்படை அம்மன் என்ற தெய்வத்திற்கு இரண்டு கோயில்கள், பூசைகள் நடப்பதைத் தவிர்ப்பது, இரண்டு பரஸ்பரம் இரண்டு கோயில்களுக்கும் மக்களை வழிபட வைப்பதன் மூலம் பிரிவினையைத் தடுப்பது அல்லது குறைப்பது. ஆயினும் அவரது நல்ல சிந்தனைகள் கதைகளாய், கற்பனைகளாய் மண்ணோடு மண்ணாகிப் போயின. அதற்காக அவர் பட்ட வேதனைகள் எல்லோருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஒரு படித்த மனிதரின் பண்பட்ட செயற்பாடுகள் நிராகரிக்கப்பட்டன. உடைத்து வீசப்பட்டன.

புத்தகமாக்குவதற்கான எத்தனிப்புக்கள்

வாத்தியாரின் இறுதிக் காலங்களில் தாம் ஊருக்காகச் செய்த சேவைகளைப் புத்தகமாக்க வேண்டும் என்று பெரு விருப்புக் கொண்டார். இது தொடர்பாக என்னோடு கதைத்தார். மிகவும் நல்ல விடயம் சேர், மலர்க் குழு ஒன்றை உருவாக்கி இப்பணியை முன்னெடுப்போம் என்று அவருக்குக் கூறினேன். ஏனெனில் இது ஊர் பற்றியது. பொது விடயமும். கூட… ஆகவே ஊர் இளைஞர்கள், சமூக நிறுவனங்கள், மன்றங்கள் என்பவற்றையும் இணைத்துச் செய்வதே நல்லது என்று தீர்மானித்தோம்.

ஊரில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மூலம் கட்டுரைகள், கதைகள், இலக்கியம் சார்ந்தவற்றை எழுதித் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நான் ஐந்து புத்தகங்கள் வெளியிட்ட அனுபவத்தைக் கொண்டு, கொழும்புத்துறையைச் சேர்ந்த கோபி என்பவரின் மெகா பிரிண்டேசுக்கு வாத்தியாரை அழைத்துச் சென்றேன். கொழும்புத்துறை சன சமூக நிலையத்தாரால் வெளியிடப்பட்ட “எனது கிராமத்தைப் பற்றிக் கூறும் முதல் நூல்” எனும் தலைப்பிலமைந்த ஆய்வுச் சஞ்சிகையைக் கோபி வாத்தியாருக்குக் காட்டினார். அதன் தலைப்பு வாத்தியாருக்குப் பிடித்துவிட்டது. அந்தத் தலைப்பையே எமது புத்தகத்திற்கும் வைக்கலாம் எனத் தெரிவித்தமையைத் தொடர்ந்து புத்தகம் அச்சிடும் பணி அன்றே ஆரம்பித்தது.

இப்போது ஊரில் உள்ளவர்களை ஒன்று திரட்டி இச் செயற்பாட்டை முன்னெடுக்கும் யோசனையை வாத்தியார் என்னிடம் ஒப்படைத்தார். நான் சில இளைஞர்களைத் தேடிச் சென்று கதைத்தேன். இது தொடர்பாக ஒரு இளைஞன் தெரிவித்த கருத்தானது:- தான் பணிபுரியும் நிறுவனத்தின் நண்பன். தனது கிராமத்தின் வரலாறு எழுதுவதற்குத் தனது ஊரில் உள்ள விடயமறிந்த பல வயோதிபர்களை ஒன்று திரட்டி அவர்களைப் பேட்டி கண்டு அதை ஒலி, ஒளிப்பதிவு செய்து தான் எழுதி முடித்ததாகவும், அப்படியான செயற்பாடு பொருத்தமானது என்றும் தெரிவித்தார். அவர் கூற்றை நாம் மறுக்கவில்லை. இன்னொரு இளைஞன் புத்தகம் அச்சிடக் காசுக்கான வழி என்ன என்று வினவ, நானும் வாத்தியார் நிதி தொடர்பாக எனக்குச் சொன்னதைச் சொன்னேன். அதாவது ஒரு லட்சம் ரூபா வாத்தியார் தருவார். மீதி ஐம்பதனாயிரம் ஊர் இளைஞர் நாம் செலுத்துவோம், என்பதை அவர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. தமக்கு வசதியில்லை என்றெல்லாம் கூறியதோடு பின்னர் அவர்களைச் சந்திப்பதிலும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இந்த இழுபறி நிலைமைக்குள் என்னையும் வாத்தியாரையும் முடிச்சுப்போட்டு முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கதைகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் தான் வாத்தியார் இறைவனடி சேர்ந்தார். இருப்பினும் அவரின் கனவுகள் மெய்ப்பட வேண்டும். எப்படியோ அவர் ஆரம்பித்த புத்தக வெளியீடு இடம்பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அமைகின்றேன்.

திரு.  க.இ.கமலநாதன்
ஓய்வு நிலை விரிவுரையாளர்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன