ramar

நாடு, நகரம், பட்டினம் என்பவற்றின் வரலாற்றை விட ஒரு கிராமத்தின் வரலாறு காத்திரமானது. கிராமத்திலிருந்தே பண்பாடு, அடிப்படைக் கலாசார விழுமியங்கள் போன்றவை தோற்றம் பெறுகின்றன. இவை காலவோட்டத்தில் மாற்றமடைந்தாலும், பல பண்பாட்டு சீரமைப்புக்கள் தொடர்ந்தும் அம்மக்களால் பேணப்பட்டு வருவது கண்கூடு. இவை அம்மக்களை ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்து நல்லதொரு சூழலை உருவாக்கி அவர்களை நற்பிரசைகளாக ஆக்கி வருவதை நாம் காணுகின்றோம். கிராமத்திலிருந்தே பண்பாடு, சமய விழுமியங்கள், கலாசாரம், ஒழுக்கம் போன்றவை தோற்றம் பெறுகின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு கிராமத்தின் வரலாறு மறைந்தும், மறந்தும் போகாமல் அடுத்த சந்ததியினரும் அறியக்கூடியதாக அவை காப்பாற்றப்படல் வேண்டும். வரலாறு எழுதப்படல் வேண்டும்.

கந்தையா கனகம்மா நிதியத்தின் காப்பாளர் திரு.க.மயில்வாகனம் அவர்கள் செய்து வரும் அறப்பணிகள் பலவற்றுள், நாவற்குழி பிரதேசத்திலுள்ள கிராமங்களின் வரலாறும் ஏனையோரால் அறியக்கூடியதாக எழுத வேண்டும் என்ற பெரு விருப்பம் கொண்டவராக இருந்தார். அந்த வகையில் கைதடி நாவற்குழி தெற்குக் கிராமத்தின் வரலாற்றை எழுதித் தரும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். தூண்டிக் கொண்டேயிருந்தார். நான் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன். ஒரு வரலாறு எழுதுவதாயிருந்தால் அதற்குரிய ஆதாரங்கள், சாட்சிகள், ஆவணங்கள் போன்றவை அவசியம் தேவைப்படுகின்றன. அந்த அளவுக்கு அவை இல்லாதபடியாலும் எனது முயற்சியை தள்ளிப்போட்டே வந்தேன். இந்நிலையில் கைதடி நாவற்குழி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் முன்றலில் சரஸ்வதி சிலை நிறுவும் முயற்சியில் அத்திவாரக்கல் நடும் வைபவத்துக்கு திரு.க.மயில்வாகனம் அவர்கள் என்னையும் அழைத்திருந்தார். அப்போது பாடசாலையின் முன்பக்கச் சுவரில் பாடசாலை இலச்சனையின் கீழ் 1959ம் ஆண்டு எனக் குறிப்பிட்டிருந்ததைக் கண்டு வேதனையுற்றேன். இந்த வரலாற்று உண்மை திரிபுபடுத்தியிருந்தமையாலும், பாடசாலை ஆரம்பம், அதன் வளர்ச்சி, கிராம அபிவிருத்தி போன்ற வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு மக்கள் தாம் விரும்பியவாறு கூறுவதை என் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள். இதன் பொருட்டும் உண்மை வரலாற்றை மக்கள் அறிய வேண்டும் என்ற உந்துதலும், ஆர்வமும் கட்டுரை எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விபரங்களைக் கட்டுரையிற் காணலாம். இந்த உண்மைகளை ஆதாரங்களோடும், சாட்சிகளோடும் நிறுவ வேண்டியிருந்ததால் என்னையும் எனது பெயரையும் குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்ற வகையில் எனக்குத் தெரிந்த, அறிந்த, கேட்ட விடயங்களை வைத்து சுருக்கமாக எழுதியுள்ளேன். குறிப்பாகக் கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலையில் 1984-1996 வரை 12 வருடங்கள் கடமையாற்றிய காலத்திற் பாடசாலை அபிவிருத்தியோடு, கிராம அபிவிருத்தியிலும் ஈடுபடும் வாய்ப்பு உண்டானது. இக்காலப் பகுதியில் நான் வகித்த அதிபர் பதவியோடு, கிராம சங்கத் தலைவர். கைதடி நாவற்குழி மகாவிஷ்ணு கடற் தொழில் கூட்டுறவுச் சங்கச் செயலாளர், மறவன்புலவு கிராமோதய சபைத் தலைவர், ஆலய செயலாளர் போன்ற பதவிகளால் உரிய அதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்தது. இது கிராமத்தின் அபிவிருத்திக்கும் பாடசாலை அபிவிருத்திக்கும் பெரும் உதவியாக இருந்தது.

இம் மலருக்கு வாழ்த்துக்கள், ஆசிகள் சான்றோரிடம் கேட்ட பொழுது, நெய்தல் என்ற பெயரை வைக்கலாம் என்றார்கள். கட்டுரைகளை மாணவர், ஆசிரியரிடமிருந்தும் சில சான்றோரிடமும் இருந்தும் பெற்றுப் புகுத்தியுள்ளோம். இவ்வாறே இம்மலர் மலர்ந்துள்ளது. இம் மலரின் நறுமணத்தினை நுகரவேண்டியது இனி உங்கள் பொறுப்பு.

திரு. வே.இராமர்
ஓய்வு நிலை அதிபர்