எனது பார்வையில் எமது பாடசாலை

மருதமும் நெய்தலும் ஒரு சேர விளங்கும் கோயிலாக்கண்டியைப் படிப்புலகம் தலை நிமிர்ந்து நிற்க வைத்த, கைதடி – நாவற்குழி தெற்கு அ.த.க பாடசாலை எனது முதல் நியமனப் பாடசாலை. எங்கெங்கோ சிங்கள தேசமெல்லாம் தமிழ் முஸ்லீம் மக்களை அழைத்துச் சேவை முன்பயிற்சி பெற்றபின், கடுமையான போராட்டச் சூழலில் ஏழு மைல் தூரம் மிதிவண்டியை உழக்கி எனது பாடசாலையை நான் அடைந்த போது “வா” என்று 1988 இல் என்னை வரவேற்றவர்கள் மூவர். அதிபர் வே.இராமர், இ.செ.பத்தநாதன், இ. சொக்கலிங்கம். அன்றிலிருந்து இன்று வரை எனது ஆசிரிய வாழ்க்கையில் முப்பத்திநான்கு வருடங்களாக நான் கண்டு, கேட்டு அனுபவித்த சம்பவங்களில் மிகச் சிலவற்றை இந்த நூலின் மூலமாகத் தங்களுக்குப் படையல் செய்கின்றேன். அத்து நேர்மையான வாழ்வின் பயனைக் கண்ணெதிரே கண்டு ஆறு பிள்ளைச் செல்வங்களுக்குத் தந்தையாகி பெரும்படை அம்மனின் வாசலை எனது புகுந்த இடமாகக் கொண்டு நான் தேடிய நிம்மதி நிலையை எட்ட பாலப்பருவத்திலிருந்தே “நேர்மையாக வாழுங்கள்” என்று உங்களை வேண்டுகின்றேன்.

மூன்றரை வருட பாடசாலைப் பணியின் பின் பலாலி ஆசிரியர் பாடசாலைக்குச் சென்றபோது அங்கு ஆர்.எஸ்.நடராஜா அதிபராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்கு 1992-1993 பயிற்சிக் காலம் முடிய நான் மீண்டும் பழைய பாடசாலைக்கு திருப்பி அனுப்பப்பட்டேன். இடப்பெயர்வுகள், பொருள் நஷ்டம், உயிர் நட்டம் நிறைந்த போராட்டக் காலங்களிலெல்லாம் எனக்குக் கைகொடுத்தது இந்தப் பாடசாலையே. அவ்வாறிருந்து 2004 பிறந்தபோது நான் சாவகச்சேரி றோ.க.த.க. இல் பணிபுரிய ஆரம்பித்தேன். இனியும் எப்போதும் எனது தாய்ப்பாடசாலையே என் மனதில் நிற்கும்.

புது வருடம் பிறந்தால் மாணவர்கள் அடுத்த (மேல்) வகுப்பில் இணைந்து 2 வாரம் தான் படிப்பு நடக்கும். அதன் பின் விளையாட்டுப் போட்டிப் பயிற்சிகள். தமது வெள்ளைச் சீருடையை விடுத்து வண்ணத்திப் பூச்சிகள் போல விதம் விதமான ஆடைகள் அணிந்து ஓடுதல் பாய்தல் கயிறு அடித்தல் என்பன முடிய, மூவர்ண அலங்காரங்கள் மிளிர அணிநடை, பெற்றோர் பழைய மாணவர் பார்த்து மகிழ சாவகச்சேரி கோட்ட அதிகாரிகள் அதிபர்கள் வருகை தர இனிய கண்காட்சிகள்.

புரட்டாதியில் வரும் நவராத்தியிலும் கலை இலக்கியப் போட்டிகள், கோலம் போடுதல், மாலை கட்டுதல் என மறக்க முடியாத நிகழச்சிகள். சங்கீதமும் கலையும், நாடகமும் எமது பாடசாலைச் சமூகத்தின் பாரம்பரிய நயங்கள். அதிபர் வே.இராமர் காலத்தில் கொத்தணி கோட்ட மட்ட நிகழ்வுகளைத் தாண்டி மாவட்ட மட்ட வெற்றிகளைப் பெற்றார்கள் எமது மாணவர்கள். ஆசிரியர் தினத்தில் க.இ.கமலநாதனின் (தற்போதைய ஓய்வு நிலை கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர்) நெறியாள்கையில் மேடையேறிய “கூடாத வாத்தியார்” நாடகம் என்னை நல்ல வாத்தியார் ஆக்கியது. அந்த நாடகம் கொத்தணி (கைதடி) கோட்டம் நிகழ்வுகளில் கலந்து (நடந்து) சோபித்தது.

உப அதிபர் இ.சொக்கலிங்கம் (ஆங்கில ஆசிரியர்) மன விருப்பப் பிரேரணையின் கீழ் சேர, சோழ, பாண்டியர் இல்லங்கள் மாறுபட்டு நாவலர், விபுலானந்தர், பண்டிதமணி என மாற்றமடைந்தது. என்றும் வண்ணம் மாறாத தூய வெள்ளை உடை அணிந்த சி.செ.பத்மநாதன் கணித பாடத்தில் மாணவர்களை முன்னேற்றி வைத்த பெருமகன். எழுத விரும்பியதில் என் நினைவுகளுக்கு அளவேயில்லை. இச் சஞ்சிகையில் இவற்றை வாசிக்கும் வாசகர்களுக்கு இவை போதுமெனக் கருதி நிறைவு பெற்று நிம்மதியடைகின்றேன்.

திரு. சி.ஜெயகணேஷன்
ஆசிரியர்