யா/கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலையும் அதிபர் திரு.வே.இராமர் அவர்களும் சில நினைவுகள்

யா/ கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலை தென்மராட்சி கல்வி வலயத்தில் முன்னிலையில் உள்ள வகை || பாடசாலையாகும். இப்பாடசாலை மாணவர்கள் 1997ம் ஆண்டிலிருந்து க.பொ.த(சா.தரம்) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுத் தொடர்ந்து உயர்தரக்கல்வி, பல்கலைக்கழகக் கல்வி பெற்று பட்டதாரிகளாக வெளியேறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணமாக இப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்களையும், ஆசிரியர்களையும் குறிப்பிடலாம். இப்பாடசாலை கஷ்டப்பிரதேசப் பாடசாலையாக இருப்பதால் இங்கு வரும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் கற்பித்தார்கள்.

இப்பாடசாலையின் அதிபராக இக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவர் சேவையாற்றியிருக்கின்றார் என்றால், அது திரு.வே. இராமர் மாஸ்டரே ஆகும். அவர் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 1960ம் ஆண்டையடுத்து தொண்டர் ஆசிரியராக கடமையாற்றிப் பின்னர் பயிற்றப்பட்ட ஆசிரியர் ஆனார். நீண்ட காலத்தின் பின்னர் 1984இல் தனது கிராமப் பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றார். திரு வே.இராமர் அதிபர் அவர்கள் ஏறத்தாழ 12 ஆண்டுகள் போர்க்கால சூழலிற் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இக்காலப் பகுதியில் பாடசாலை நிர்வாகத்திற் கொத்தணி முறை நடைமுறையில் இருந்தது. அப்பொழுது கைதடிக் கொத்தணியில் ஓர் உறுப்பினராக யா/கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலை விளங்கியது. கொத்தணி அதிபராக இருந்த திரு.சோ.கணேசலிங்கம் அவர்கள் தனது கொத்தணியில் இருந்த பத்துப் பாடசாலை அதிபர்களுடனும் நல்லுறவைப் பேணியதில் திரு.வே.இராமர் அதிபர் முக்கியமானவராவார். அப்பொழுது யான் மூவாதாரப்பாடசாலையாக விளங்கிய யா! கைதடி முத்துக்குமாரசாமி மகா வித்தியாலயத்தில் ஓர் ஆசிரியராக கடமையாற்றியபடியால் அறிவேன். ஏனெனிற் கொத்தணி அதிபர் திரு.சோ.கணேசலிங்கம் அவர்களுடன் ஒரு கூட்டமாக அவரது வீட்டில் நடந்த வைபவமொன்றிற் கலந்து கொண்டமை இன்றும் எனது நினைவில் உள்ளது.

பின்னர் 01.02.1993 இல் யான் யா/நாவற்குழி மகாவித்தியாலய அதிபராக நியமனம் பெற்றேன். இதனால் திரு.வே.இராமர் அவர்கள் எனது அயற் பாடசாலை அதிபராகவிருந்தார். இவரது பாடசாலையில் அப்பொழுது தரம் 1 தொடக்கம் தரம் 9 வரை வகுப்புக்கள் இருந்தன. தரம் 9 பூர்த்தி செய்த அவரது பாடசாலை மாணவர்கள் யா/நாவற்குழி மகாவித்தியாலயத்திற்கே வருவார்கள். அம் மாணவர்கள் க.பொ.த (சா.தரம்) பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுத் தருவார்கள். திரு.வே.இராமர் அவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் தரம் 11 வரை வகுப்புக்களை ஆரம்பித்து அப்பாடசாலையை வகை II பாடசாலையாக மாற்றிய பெருமை அவரையே சாரும். இவ்வாறாகப் பாடசாலையைத் தரம் உயர்த்திக் கொண்டிருந்த வேளை யாழ்ப்பாண மாவட்டம் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்த பொழுது, அவர் தனது குடும்பப் பாதுகாப்புக் கருதி வன்னிப்பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்தார்.

அக்காலங்களில் ஒரு பாடசாலையின் அதிபரே இக்கிராமத்தின் தலைவராகவும் இருப்பார். அந்த வகையில் திரு.வே.இராமர் அவர்கள் தனது கிராமத்தில் இருந்த மகாவிஸ்ணு ஆலயத்தின் முகாமைத்துவத்தின் பங்காளியாக இருந்தார். அத்தோடு கிராமத்தில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம் என்பவற்றின் உருவாக்கத்திற்கு ஏனையவர்களோடு சேர்ந்து பாடுபட்டார். இவர் ஆத்மீகத் தேடுதலில் ஈடுபடுபவர். வடக்கு, கிழக்கு மாகணங்களில் உள்ள சக்தி ஆலயங்களை நன்கறிந்தவர். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு எனும் கிராமத்தில் திரௌபதை அம்மன் எனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயம் உள்ளது. அவ்வாலயம் பற்றி, தனது ஆய்வுக் கட்டுரையொன்றிலே திரு.வே.இராமர் மாஸ்டர் அவர்கள் அழகாகக் குறிப்பிடுகின்றார். இவ்வாறாக நல்ல அதிபராக, சமூக சேவையாளராக, ஆத்மீகவாதியாக வாழ்ந்து மறைந்த இராமு மாஸ்டரை நினைவு கூருவதில் பெருமையடைகின்றேன்.

ஓம்! சாந்தி! சாந்தி! சாந்தி!

திரு. பி. முத்துலிங்கம்
ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர்