அழிந்து செல்லும் கிராமியம்

தமிழர்களாகிய நாங்கள் சுயமான கலாசார பண்பாட்டை உடையவர்கள். எமது முன்னோர்கள் தேடி வைத்த பல நல்ல விடயங்கள் தேட்டங்களாக எங்கள் ஊர்களிலே பரவிக் கிடக்கின்றன. எங்களுக்கு மனோபலம் தந்த தேட்டங்களை எமது நாட்டின் போர், இடப்பெயர்வுகள், இயற்கை அழிவுகள் சிதைத்து விட்டன.

கடுமையாக உழைப்பவர்கள் நாங்கள். ஆற அமர இருக்கும் போது கூட வாழ்வுக்கு உரம் சேர்க்கும் உன்னதங்களாக கலைகள், விளையாட்டுகளைப் படைத்தவர்கள். அவற்றை எதிர்கால சந்ததியின் விருத்திக்குக் கையளிப்பவர்கள் எம் முன்னோர்கள்.

ஒரு கிராமத்தின் தனித்துவத்தையும், பண்பாட்டையும், நாகரீகத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழ்பவை அந்தக் கிராமத்தின் மரபு வழியாகப் பேணப்பட்டு வரும் இலக்கியங்கள் ஆகும். ஒரு கிராமத்தின் அகப், புறச் சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப இலக்கியப் பண்புகளும் காலப்போக்கில் மாற்றம் அடைந்து வருகின்றமையாக, நேற்று இருந்த இலக்கியத்தின் செழுமையும் தனித்துவமும் இன்றைய இலக்கியங்களில் காணப்படுவதில்லை. அது போல இன்றைய இலக்கியத்தின் போக்கு நவீனத்துவமடைந்து இன்னொரு வகையில் புதிய பிறப்பெடுத்தாலும் கிராமிய இலக்கியங்களின் தனித்துவம் என்றும் அழிந்துவிடாது.

கிராமத்து இலக்கியங்களாகக் கதைகள், பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், கலைகள், விளையாட்டுகள்போன்றகிராமிய இலக்கியங்கள், கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்களின் தேவைகளையொட்டி எழுந்த தொழில் முயற்சிகள், குடும்ப உறவுகள், வாழ்க்கைத் தேவைகள், சுயபாதுகாப்பு சார்ந்த நம்பிக்கைகள் போன்றவற்றை அடியொற்றியே தோற்றம் பெற்றன.
கிராம மக்களின் நாகரீகத்தோடும் பண்பாட்டோடும் விளையாட்டு இணைந்தமையாகும். விளையாட்டை மன மகிழ்ச்சியூட்டும் செயல் என்பர். இவ்விளையாட்டுகள் பொழுதுபோக்காக மட்டுமன்றி உடல்நலம், மனநலம் பேணுபவையாகவும் உள்ளன. வாழ்க்கைக்கு பயிற்சியளிக்கும் களம் என்றும் விளையாட்டைக் கூறுவர்.

விளையாட்டு எல்லா மனித இனங்களிலும் பண்பாட்டிலும் ஒன்றாக உள்ளது. பொதுவாக விளையாட்டுக்கள் ஒரு குழுவினுடைய ஆட்டமாகவும், போட்டியை ஏற்படுத்துவதாகவும், வெற்றியை நிர்ணயிப்பதாகவும், விதிகளைக் கொண்டதாகவும் அமையும். விதிகள் பொதுவாக பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமையும். விளையாட்டுகள் தனி விளையாட்டு, இருவர் சேர்ந்த
விளையாட்டு, குழு விளையாட்டு என்றும் பாடலுள்ள விளையாட்டு, பாடலில்லா விளையாட்டு எனவும் வகைப்படுத்தலாம். அவ்வாறான விளையாட்டுக்களாக பேணிப்பந்து, கிளித்தட்டு, எல்லி குத்துதல், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், கண்கட்டி அடித்தல், சடுகுடு, ஒப்பு, கெந்தி அடித்தல், வாரோட்டம், பசுவும் புலியும், எட்டுக்கோடு. எவடம் எவடம், குளம் கரை, கீச்சு மாச்சு தம்பளம், புளிச்சல், கிட்டிப்புள், முள்ளுப்பிராண்டி, கிங்கினி நோனா, ஆச்சி ஆச்சி என்ன தேடுறாய். ஓரம்மா கடைக்கும் போனாள், அரசன் வந்தான், கொக்கன் சுட்டுதல், தாயம், மாபிள் அடித்தல், பூப்பறிக்கப் போகின்றோம், மாங்கொட்டை விளையாட்டு, மெல்லப்போய் கிள்ளிவா, காத்தாடி விடுதல், கள்ளன் பொலிஸ், சங்கு பித்தளை. ஒழித்துப் பிடித்தல், அக்காவிட்டைபோனேன் போன்ற பல விளையாட்டுகளைக் குறிப்பிடலாம்.

இவ் விளையாட்டுகளை விளையாடும் போது பெரியவர்கள், சிறியவர்கள். பெரியவர்களும் சிறியவர்களும் என்ற வகைப்பாட்டிற்குள் நின்று விளையாடினார்கள். அதுமட்டுமன்றி தந்தை, மகள், பெரியப்பா, சித்தப்பா, மச்சாள், பேரன், தாத்தா என்ற உறவு முறைகள் கூறி விளையாடியதுடன் அவர்களை உற்சாகப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும், விளையாட்டின் நுட்பங்களை அறியவும், இயற்கையாக எமக்குக் கிடைக்கும் புலக்காட்சிகளையும் நல்ல படைப்பாக்க செயல்களையும் அவர்கள் வெளிப்படுத்தி நின்றார்கள். இச்செயல்கள் ஊடாக மகிழ்ச்சி. கூட்டு முயற்சி, ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, மனத்தைரியம் ஏற்படல். ஊக்குவித்தல், பிறருக்கு உதவும் மனிதநேயம், கூட்டுணர்வினை வளர்த்துப் பிரச்சனையைத் தீர்த்தல், உளரீதியான மாற்றம், சிறந்த தொடர்பாடல், திறன்களை வெளிப்படுத்தல், தலைமைத்துவம் ஏற்றல் போன்ற சமூகப் பெறுமானங்கள் வளர்த்தெடுக்கப்பட்டன. 

ஆனால் இன்று ஊர்கள் சிதைந்து விட்டன. உறவுகள் பிரிந்து விட்டன. ஊருக்குள் தொழில் நுட்பச் சாதனங்கள் புகுந்து  விட்டன. ஊரவர்கள் விளையாட்டுகளை மறந்து விட வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் விளையாட்டுகளை விளையாடுவதற்குப் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் நேரம் இருப்பதில்லை. உலகமயமாதலின் செல்வாக்கினாலும் அறிவியல் யுகத்தினை நோக்கிய வாழ்வினாலும் நாம் வேறொரு உலகத்தினைப் படைக்க முயற்சிக்கின்றோம். அவ்வாறான உலகத்தில் மனிதர்கள் மனிதர்களுடன் தொடர்புகொள்ளப்போவது மிகக் குறைவானதாகவே காணப்படும். மனிதர்கள் இலத்திரனியல் சாதனங்களுடன் தமது நெருக்கமாக உறவினை வளர்த்துக் கொள்வார்கள். இதனால் மனிதன் தனிமைப்படுத்தப்பட்டு விட்டான். அவனிடம் இயல்பாக இருந்த நல்ல மனிதப்பண்புகள் அருகிக் கொண்டே போகின்றன. நான், எனது குடும்பம் என்று மட்டும் சிந்திக்கத் தொடங்கிவிட்டான். இவ்வாறான சிந்தனைகள் நாமாக உருவாக்கிக் கொள்ளவில்லை. கடந்த காலங்களில் நடைபெற்ற போர், இடப்பெயர்வு. காணாமல் போதல் போன்றவைகள் தந்த அனுபவப் பரிசாக இச் சிந்தனை உருவானது. இச் சிந்தனையால் மனிதன் தனக்குள் முரண்படுவதுடன் சமூகத்துடன், சூழலுடன். இயற்கையுடன் கடவுளுடன் முரண்படுகின்றான். இம் முரண்பாடு வாழ்வினை அவன் இன்பமாகக் கருதாது துயர்மிகுந்த வாழ்வாகக் கருத வழிகோலுகிறது. வாழ்க்கை இன்பம் நிறைந்தது. அதனை வாழக் கற்றுக் கொள்வதற்கு தயாராகுவோம்.

தொழில் நுட்ப உலகத்தில் உறவுகளைத் தொலைத்து விடாது அதனை இறுகப் பற்றி எமது எண்ணங்களை, சிந்தனைகளைச் சரியான பாதையிற் செல்ல எமது மனதை நாமே வழி நடத்துவோம்.

திருமதி ச.ஜெயந்தி
கைதடி நாவற்குழி தெற்கு