கடலலைகள் தாலாட்ட துயிலுகின்ற தீவினில் மணிமுடியாய்த் திகழும் வட மாகாணத்தின் மைல் கல்லாய்த் திகழும் யாழ் நகருக்கு அருகில் சைவமும் தமிழும் தழைத்தோங்க உன்னத ஊராய் விளங்கி நிற்பது கைதடி நாவற்குழி தெற்குக் கிராமம் ஆகும்.
“தமக்கென வாழா பிறர்க்கென நோற்பர்” வாழும் அழகிய கிராமம் இதுவாகும். கண்ணைக் கவரும் வயல் வெளிகளும், மனதை ஒருமுகப்படுத்தும் ஆலயதரிசனங்களும், கல்வியும் ஒழுக்கமும் புகட்டும் பாடசாலையும், மக்கள் தேவை புரிந்து சேவை செய்யும் சங்கங்களும், கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என உணர்த்தும் மனிதநேயமும் ஒற்றுமை வாழ்வும் எடுத்துக்காட்ட மிடுக்கோடு இங்கு இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

தொல்காப்பியம் வகுத்த நானிலங்களில் மருதமும், நெய்தலும் இணைந்த அழகிய கிராமம் இதுவாகும். கடலின் அலைகள் தாலாட்ட, செந்நெல் வயற்கதிர்கள் அசைந்தாட, சோலைக்குயில்கள் இசைபாட ஆலய தரிசனங்களும். கிராமிய நிகழ்வுகளும், கூட்டு வாழ்க்கைப் பண்பாடும் நிறைந்து காணும் பூமி கைதடி நாவற்குழி தெற்குக் கிராமம் ஆகும்.

விசேட தினங்களில் ஊரே களைகட்டும். இன்னல்களின் போது உறவுகள் தோள் கொடுக்கும். தற்பெருமை கொள்ளாத அறிஞர்களும். இல்லாளின் இயற்கை எழிலும், மழலைகளின் குதூகலிப்பும், அனுப வ ஆசான்களாய் முதியவர்களும் ஒன்றாய் வாழும் அழகிய கிராமம் கைதடி நாவற்குழி தெற்குக் கிராமம் ஆகும்.
மண்ணைப் பொன்னாக்கும் மகத்தான பூமியின் வளர்ச்சிப் போக்கினை திரு.வே.இராமர் தனது அறிவினைச் சொற்கள் ஆக்கி ஊரின் சிறப்பினை வரலாற்றுச் சிற்பமாக்கியிருப்பதனை எமது கிராமத்தின் வரலாறு என்ற நூலிற் காண முடிகின்றது.
ஊரின் தோற்றம். ஆரம்ப வாழ்வியல் முறை, பின்னர் படிப்படியான வளர்ச்சி, இன்று எம் ஊரின் பெருமை என்ற போக்கிற் தன் ஊரின் வரலாற்றைப் பதிவு செய்துள்ளமை தனித்துவமாக உள்ளது.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்று உணர்ந்து சேவையாற்றி ஓய்வு நிலை அதிபர் இராமர் எனும் பெரியவர் செயலாற்றியுள்ளமை காலத்தால் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
இவரது பணி தொடரவும், கிராமம் தழைத்தோங்கவும், சேவை பரவிப் பெருகவும், இறைவன் அருள்பாலிக்க மனதார வேண்டி நிற்கின்றேன்.
திரு. கந்தையா தேவநேசன்
ஓய்வு நிலை அதிபர்
யா / கோவிலாக்கண்டி மகாலட்சுமி வித்தியாலயம்