இசையும் இறைவனும்
இறையும் இசையும் ஒன்றெனக் கண்டவன் தமிழன். ஏழிசையாயும், இசைப்பயனாயுமிருப்பவன் இறைவன். ‘பண்ணின் இசையாக நின்றாய் போற்றி’, ‘இசை எழுகந்தன்’, ‘பாட்டகத்து இசையாகி நின்றான்’ என்பன போன்ற தெய்வப்பாடல் வரிகள் இறைக்கும், இசைக்குமுள்ள தொடர்பினை உணர்த்துகின்றன. கோவிலின் ஒலிவடிவமே இசை. இசையின் வடிவமே கோவில். தேவாரப் பாக்களில் தக்கை, தண்ணுமை, வீணை, யாழ், தம், தகினிச்சம், தாளம், மொந்தை போன்ற பற்பல இசைக் கருவிகளின் பெயர்களைக் காண்கின்றோம். இசையைத் தோற்றுவித்த சிவபெருமான் ஆடல் வல்லானாகவுமிருப்பவன்.
“வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழ் ஆடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுது ஆட
நாதம் கொண்டு ஆடினான் ஞான ஆனந்தக் கூத்தே” என்பார் திருமூலர்.
நாதவடிவினன் இறைவன் ‘நாதம்’ என்பதற்கின்னொலியென்றும், தலைவனென்றும் பொருளுண்டு. உலகினைப் படைத்துக்காக்கும் இறைவனே, இன்னொலியாக, இசையாக விளங்குகின்றான். தான் வணங்கும் ஒவ்வொரு தெய்வ வடிவத்துடனும் ஒரு இசைக்கருவியைச் சேர்த்தே வழிபட்டான் மனிதன். கலைத்தேவியின் கரத்தில் வீணை, கண்ணனின் கையில் புல்லாங்குழல், முக்கண்ணனிடம் உடுக்கை இவ்வாறு வரிசைப்படுத்திப் போகலாம். இந்துக் கடவுளர் மட்டுமன்றிக் கிரேக்க நாட்டுத் தேவதைகளும் இசைக்கருவிகளேடு இணைந்து வழிபட்ட செய்தி இங்கே ஒப்பு நோக்கத்தகும்.
“லையர் “எனுமிசைக் கருவியைத் தோற்றுவித்தது அப்போலோ என்ற தேவதையென்பது கிரேக்கரின் நம்பிக்கை மெஸபொடேமியாவில், ‘இய’ எனும் தேவதைக்கும் ‘பலக்’ என்ற முழவரும் இஷ்தர் எனும் தேவதைக்கும் அவளது கணவனுக்கும் மெல்லிய நாளத்தோடு கூடிய குழற் கருவியொன்றும் இணைக்கப்பட்டிருந்தன.
இசையும் இறை வழிப்பாட்டுத் தலங்களும்
இசை வழிபாடில்லாத இறை வழிபாடு, சீவனற்ற சடலமென்றே கருதிப் பாடல் இன்னியம் ஆடல் முதலியவற்றையெல்லாம், இறை வாழிபாட்டுக் கென்றே முறைமைப்படுத்தி வைத்தான் தமிழன். இக்கலைகள் ஆலயங்களில் கட்டாயமாக்கப்பட்டன. இவை வெறும் பொழுது போக்குச் சாதனங்களாக மட்டும் கருதப்படவில்லை. இறை வழிபாட்டு தலங்களான ஆலயங்கள். அதற்காக மட்டுமன்றிக் கல்வி பயிற்றும் பெருங்கல்விச்சாலைகளாகவும் திகழ்ந்திருக்கின்றன. வேதங்கள், ஆகமங்கள், சாஸ்திரங்கள் போன்றவற்றில் பயிற்சி பெறவந்த மாணவர்கட்கு, ஆலய வளாகங்களில் தான், வகுப்புகள் நடைபெற்று வந்தன. இவை தவிர இசை, நாட்டியம் போன்ற கலைகளும், அங்கே தான் பரம்பரையாகப் பயிலப்பட்டும் போற்றிப் பாதுகாக்கப்பட்டும் வந்தன. தமிழ்ச்சமுதாயத்தின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட நிலையங்களாக ஈடிணையற்ற இந்தியக் கலாச்சாரத்தின் மையங்களாகத் திகழ்ந்தவை ஆலயங்கள். நாம் சிறந்த இசையினைத் சுவைக்கவோ, உயர்வான நாட்டிய வகைகளைக் கண்ணுறவோ கோவில்களை நாடித்தான் செல்ல வேண்டியிருந்தது. அநேகமாக, ஒவ்வொரு கோவிலிலுமே இன்னியம் வல்லார். ஆடற் கணிகையர். நிருப்பதியம் விண்ணப்பியார். பாடுலார், நட்டுவம் புரிவார் போன்ற பல்வேறு கலைஞர்கள் நிரந்தரச் சேவைக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய கலைகளும், ஆலயத்தொண்டும் பரம்பரையாக வளர்ந்து வந்தன. இவர்களுக்கு மாதாந்த அல்லது வருடாந்த ஊதியம் ஆலயங்களில் வழங்கப்பட்டதோடு குடியிருக்க வீடும் பயிரிட நிலமும் மானியமாக அளிக்கப்பட்டிருந்தன. வீணைக்காணி, மேளக்காரக்காணி, நட்டுவக்காணி போன்ற சொற்கள் இவ்வித மானியங்களைக் குறிப்பனவாகவுள்ளன. தஞ்சையை ஆண்ட 1ம் இராசராச மன்னன் கொட்டி மத்தளம், உடுக்கை வாத்தியம் (குழல்) போன்ற இசைக்கருவியாளர், நடனமாதர். திருப்பதியம் விண்ணப்பிக்கும் ஓதுவார் மூர்த்தி போன்ற பல கலைஞர்களுக்கு நிவந்தமளித்த செய்திகளைக் கல்வெட்டுகளில் காண்கின்றோம் கி.பி 1343 ஆண்டு திரிபுவனச் சக்கரவர்த்தி இராசநாராயண சம்புலராமன் என்பான் திருப்பாட்டுப் பாவோர்க்கு மானியம் அளித்துள்ளார்.
1015 ஆம் ஆண்டு திருவாய்மொழி பாடுவோருக்கும் கோயிலில் நிதம் மூவேளையும் அமுது பிரசாதம் வழங்க உத்திரவிட்டிருக்கிறான். 1ம் இராசேந்திரன், 1ம் குலோத்துங்கச் சோழமன்னன் கி.பி 1085ம் ஆண்டு திருப்பள்ளியெழுச்சி, திருவாய் மொழிப்பாசுரங்களை விண்ணப்பிப்பார்க்கு மானியங்கள் அளித்ததையும் திண்டிவனம் கோவிலில் வீணையிசைப்பவனுக்கு நிலங்களை அளித்த செய்தியினையும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இது போன்று இசைக்கும். கலைஞர்களுக்கும். ஆலயச் சேவை புரிவதற்காக எத்தனையோ மன்னர்கள் பேராதரவளித்து. வளர்ந்திருக்கின்றனர். நெல்லை அளித்து கொடுக்கும் அளவைக்கு ஆடல் வல்லான் எனும் பெயரினை முதலாம் இராசராசன் இட்டது இவனுக்கு இசையிலும், ஆடலிலும் உலகம் யாவையும் தன்னாடலால் ஆட்டுவிக்கும் இறைவனின் பக்தியும் அக்கலைகள், ஆலயங்களில் பெற்றிருந்த முன்னுரிமையும் நமக்கு உணர்த்துகின்றன.
திருமதி டுயந்தினி யூட்பற்றிக்
சங்கீத ஆசிரியை
யார் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயம்