ramar

அமரர் வே.இராமர் அவர் காலமான செய்தி பேரதிர்ச்சியாக இருந்தது. அவரோடு நான் கொண்ட அன்பு இன்றும் மறக்க முடியாத பேரன்பு. யாழ்ப்பாணம் கைதடி நாவற்குழி பிரதேசத்திற் பிறந்து கல்வியில் உயர்ந்து கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலை அதிபராகவும் 1996ம் ஆண்டு இடப்பெயர்வின் பின் வன்னிப்பெருநிலப்பரப்பின் பாடசாலை ஒன்றில் அதிபராகவும் இருந்து, அரச பணிதனில் தோளோடு தோள் நின்று உழைத்து, நிரப்ப முடியாக வெற்றிடமாக நீங்கள் புகழோடு நிறைவாக வாழ்ந்து நீங்கிச் சென்றீர்கள்.

அந்நாளிலிருந்து ஓராண்டு நிறைவு பெற்று இந்நாளில் தம்முடைய நினைவை பகிர்வதில் பெருநிறைவடைகிறேன். நல்ல உடல் உள ஆரோக்கியமான நிலையில் காண்போரை எல்லாம் புன்சிரிப்போடு வரவேற்று உரையாடும் நல்மனம் கொண்ட அன்னாரது மரணம் ஏற்றுக் கொள்ள முடியாததாகக் கவலை நிறைந்ததாக அமைந்தது.

சிறிய வயதிலிருந்தே நன்கு பழக்கப்பட்டவராக வாழ்ந்தபோதிலும், 1995ம் ஆண்டு கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலைக்கு ஆசிரியராக நான் சென்ற போது இவர் தொடர்பாக முழுமையாக அறிந்து கொண்டேன். என்னுடைய இன்றைய உயர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருந்தவர். ஓய்வு பெற்ற பின்னரும் கூட இவரது வழிகாட்டல் தொலைபேசி மூலமும் கடிதம் மூலமும் தொடர்ந்தது.

அது மட்டுமன்றி போக்குவரத்துச் சுமூக நிலையை அடைந்த பின்னரும் கூட யாழ்ப்பாணம் வருகை தருகின்ற போது எனது இல்லத்திலும், எனது கல்லூரியிலும் என்னைச் சந்தித்துச் செல்லும் வழக்கத்தையும் கொண்டவர். அவர் தன்னுடைய பிள்ளைகளைப் பல கஷ்டங்களின் மத்தியிலும் கல்வியில், தொழிலில் நன்னிலைக்கு வருவதற்காகப் பெரும்பாடு பட்டவர். இவர் கலைத்துறையிலும் நாடகத்துறையிலும் சிறந்த ஒரு கலைஞனாகக் காணப்பட்டதுடன், சைவ சமயத்தில் அதிகம் பற்றுக் கொண்டவராகவும், கண்ணன் மீது அதீத பக்தி கொண்டவராகவும் காணப்பட்டார். கைதடி நாவற்குழி பிரதேசத்தில் எட்டாம் வகுப்பு வரை இருந்த பாடசாலையை கா.பொ.த (சா/த) தரம் வரை உயர்த்தி அப்பிரதேசத்தினுடைய கல்வி எழுச்சிக்காகத் தன்னாலான பணிகளைச் செய்து சிறந்த கல்விச் சமூகத்தினைத் தோற்றுவித்தவர்.

அவரது இறுதி ஆசையாகக் காணப்பட்ட கைதடி நாவற்குழி தெற்கு கிராமத்தின் வரலாற்றுத் தொகுப்பு நூலினை அனைத்து ஏற்பாடுகளும் செய்து வெளியீடு செய்ய முன்னர் அவருடைய பிரிவு நிகழ்ந்து விட்டது.

தன் வாழ்க்கைக் காலத்தில் தன்னைப் பிறருக்காக அர்ப்பணித்துத் தன் பிரதேசம் எழுச்சி காண அயராது உழைத்து, அந்த எழுச்சியில் மகிழ்ச்சி கண்டு வாழ்ந்த அன்னாரின் இழப்பு பேரிழப்பாகும். “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற தெய்வப் புலவர் வாக்குப் போல, இந்த உலகில் நற்பணிகள் பல செய்து வாழ்ந்த அன்னாரின் ஆன்மா இறைவன் பாதார விந்தங்களில் சாந்தி பெறும் என்பதில் ஐயமில்லை.

திரு. செ.பேரின்பநாதன்
அதிபர் யா/டிறிபேக் கல்லூரி சாவகச்சேரி