வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் என்றும் தெய்வத்துள் வைக்கப்படும்

எமது கிராமமாகிய கைதடி நாவற்குழி தெற்கு நல் ஆசான் அதிபர் மதிப்பிற்குரிய வேலுப்பிள்ளை இராமர் ஐயா அவர்கள் ஆசிரியராக, அதிபராக, சமூக செயற்பாட்டாளராக திகழ்ந்தவர். நான் அறிந்த காலத்தில் இருந்து வெள்ளை நிற வேட்டியும், வெள்ளை நிற சேட்டும் அணிந்து கொள்வார். அவரது நடையில் மிடுக்கிருக்கும். நேரிய சிந்தனையாளராக அவரை நான் கண்டு கொண்டேன். நான் இக்கிராமத்தில் வசிக்கத் தொடங்கிய காலம் தொடக்கம், இடம் பெயர்ந்த காலம் வரை, எமது கிராமத்திலுள்ள சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து, சமூக செயல்பாடுகளில் என்னையும் இணைத்து, சமூக செயற்பாடுகளில் களம் இறக்கிய பெருமை மதிப்பிற்குரிய அதிபர் அவர்களையே சாரும். கிராம நலன் விரும்பிகளுடன், நானும், அதிபர் அவர்கள் தலைமையில் எடுக்கப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் வெற்றியினைத் தந்துள்ளன. குறிப்பாகச் சொல்லப்போனால் எமது கிராமத்திற்கு மின்சாரம் கிடைப்பதற்கு அதிபர் அவர்களின் வழிகாட்டுதலில் எமது சமூக செயற்பாட்டாளர்களின் உதவியுடன் செயற்பட்ட காலத்தில் அதனை கிடைக்கவிடாமல் பலவழிகளிலும் தடைசெய்யப் பார்த்தனர். ஆனால் அதிபர் அவர்களின் அயராத உழைப்பினாலும் எமது மக்களின் ஒத்துழைப்பினாலும் மின்சாரம் கிடைத்தது. கிராம மக்கள் அனைவரும் மகிழ்வடைந்தோம். அதிபர் அவர்கள் எப்படிப்பட்ட மேலதிகாரிகள் என்றாலும், பேசி வாதிடும் தன்மையுள்ளவர். எமது பக்கம் நியாயம் உள்ளது என்றால் எதற்கும் எவருக்கும் பயப்பட மாட்டார். எமது கிராம மக்களை நல்வழிப்படுத்துவதில் மிகவும் அக்கறை உடையவர். இவை அவருடன் பயணித்த காலத்தில் நான் அறிந்து கொண்டது. அதிபர் அவர்களை எமது பெரியோர்கள், சிறியோர்கள் அனைவரும் இராமு வாத்தியார் என்று செல்லமாக அழைப்பார்கள். அவரது காலத்தில் படித்தவர்கள் பல்வேறு துறைகளிலும் கல்விமான்களாகவும் திகழ்கின்றனர் என்பதை நாம் மறந்துவிட முடியாது. அதிபர் அவர்கள் என்னை தன்னுடன் இணைத்துக் கொண்டது எனக்கு கிடைத்த வரப்பிரசாதமாக எண்ணுகின்றேன். அவரின் செயற்பாடுகள் அனைத்தும் எமது கிராம மக்களின் மனதிற் பதியப்பட்டவையாகும். அதிபர் அவர்கள் எமது கிராம மக்களின் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது உண்மையாகும்.

நன்றி
இராமர் நாமம் என்றும் வாழ்க 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

என்றும் அதிபரின் அன்பானவன் 
திரு. ஐ.தனஞ்செயன்
வேலணை தெற்கு – 6