அகல் விளக்கொன்று பிரகாசிக்கின்றது.


நெய்தல் மலருக்கு வாழ்த்துரை எழுதுவதில் மிகுந்த மகிழ்வடைகின்றேன். பொதுவாக நெய்தல் என்றதும் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்பு எனவும் கருதுவதுண்டு. ஆயினும் நெய்தல் என்பது ஆக்குவது, புனைவது, இணைப்பது, நிலைப்பது எனவும் கருதலாம்.

இப்பிரதேசத்தில் வாழ்பவர்களை பரதவர், மீனவர், முக்குவர், கரையாளர் எனப் பல பெயர்களில் குறிப்பிட்டாலும் அவர்கள் நீர் வேளாளர்கள் என்பதே மிகப் பொருந்தும். நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்பவர்களை வேளாளர், கமக்காரர், விவசாயி என்று விளிப்பது போல உயிராபத்தைத் தரக்கூடிய கடல் மீதோடித் தொழிலைப் புரிபவர்களை நீர் வேளாளர் எனலாம். மானம் காக்கவென பாவோடிக் குறுக்கே இழையோடி இறுக்கி ஆடை நெய்து தருவதும் “நெய்தல்” தான். அவ்வாறே அல்லும் பகலும் அயராது உழைத்து மாணவர் கல்வியை அறுவடை செய்தலும் நெய்தல் தான். அவ்வாறு 60 வருடங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்தில் ஒரு பாடசாலையை ஆரம்பித்து அறிவுடை சமூகமாக ஆக்கியதும் ஒருவகை நெய்தல்தான். ஆடை நெய்யும் வேளை அறுந்து வரும் இழையைப் பொறுமையாகப் பொருத்துவது போல, மிகப் பொறுமையாகவும் சகிப்புத் தன்மையுடனும் வேலுப்பிள்ளை இராமர் இப்பிரதேசத்தில் ஓர் பாடசாலையை ஆரம்பித்தார். எமக்கு ஏன் தனிப் பாடசாலை எனக் கேட்டவர்களும், இருக்கின்ற பாடசாலைகளுக்கே கல்வி கற்க மாணவர்கள் வருவது குறைவு, அவர்களுக்குப் படிப்பதில் அவ்வளவு நாட்டம் இல்லை. இவர் ஒரு “புதிய பாடசாலை உருவாக்கப் போகின்றாராம்” எனக் கேலி செய்தவர்களும் பாடசாலை அமைக்கக் காணி வழங்க முன்வந்தவர்களையும். தயங்கி நின்றவர்களையும் உசுப்பேற்றித் தடுத்து விடப் பார்த்தவர்களும் ஏராளம். அப்போது மட்டுமல்ல இப்போதும் கூட எப்போதும் முற்போக்கான ஒரு செயலை ஆரம்பிக்கும் போதும் முன்னெடுத்துச் செல்லும் போதும் பலவிதமான நெருக்கடிகள், இடர்கள் செய்வதற்கென ஒரு தொகுதி மக்கள் இருப்பர். அவ்வாறான இடர்களை எல்லாம் சகித்துத் தாண்டி நிறுவிய பாடசாலை இன்று தென்மராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்குள் முதன்மையாக பேசப்படும் பாடசாலையாக மிளிர்கின்றது. இப்பிரதேச மாணவர்களும் மக்களும் தங்கள் வாழ்வு சிறப்படைய எழுந்தபாடசாலையை நன்றியுடன் பராமரிக்கின்ற இவ்வேளையில் வாழும் காலத்திலேயே தன் மனதில் கருக்கொண்டெழுந்த சிந்தனை உயர் வடிவெடுத்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு அவரும் மகிழ்வடைவார். அவ்வேளையிலே இப்பிரதேசத்தில் கல்வி, சமூக ஒழுக்கம் சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டுவரும் ‘கந்தையா கனகம்மா’ நிதியமாகிய நாம் பாடசாலை வளாகத்துள் கல்வித் தெய்வம் எனச் சொல்லும் சரஸ்வதியைச் சிலை வடிவில் செய்து நிறுவி, அதனைப் பாடசாலைச் சமூகத்திடம் வழங்கும் நிகழ்வில் இவ்விழாவின் பதிவேடு மலர்கின்றமையானது சாலச் சிறந்த காலத்திற்கேற்ற முயற்சியாகும். அவ் வேளையிலும் கூட வழமைக்கு மாறாய் இப்பிரதேசத்தைச் சேர்ந்த கற்றவர்களிடமும் மாணவர்களிடமும் இருந்து ஆக்கங்களைப் பெற்றுப் பதிவு செய்வதென்பது உயர் சிந்தனையாகும் கற்றவற்றை எழுதச் செய்யும் செயலாகும். மிகவும் பாராட்டப்பட வேண்டியதும் ஆகும்.

நில்லாவுலகை ஆக்கியும் காத்தும் மங்கை
நல்லாளோ டினேற்று உருவைப் பகிர்ந்தும்
பொல்லாவினை களறுத்துப் புத்திக் கூர்மையுடன்
நல்லாயுமை வைப்பான்(ள்) வாழ்க வளர்க

திரு. கந்தையா மயில்வாகனம்
காப்பாளர்
கந்தையா கனகம்மா நிதியம்