அகரம் முதல் எழுத்துக்களின் ஆரம்பம்
அதுவே அன்னைத் தமிழை அலங்கரிக்க வந்த முதற் தோற்றம்
எனது கருவின் ஆரம்பமும் அன்னையின் உதிரம்
ஆண்டவன் என்ற உயர்ந்த மேலான பிரமம்
அன்னைக்குக் கொடுத்த ஒப்பற்ற வரம்
ஈண்டு இவ்வையகத்துக்கு கிடைத்த இணையில்லா பிறப்பு
பிறப்பு எனும் உயர்ந்த உன்னத வெளிச்சம்
பிறப்பு என்பது ஏழேழு ஜென்மங்களுக்கும்
தொடரும் விந்தைமிகு அற்புதம்.
ஈருடலும் ஓருயிராகக் கலந்து உருவாகும்
உன்னத சோதிப் பிழம்பு.
கருவாகி உருவாகி காசினியில் கால்பதித்து
களிப்புற்று செழித்து வளரும் கால வித்து
வித்தாகும் முன்(பு) மாதங்கள் ஈரைந்து
அன்னை உதிரத்தில் முளைகட்டிய முத்து
பத்திரமாய் பாரினில் பதியம் கொண்டு
பசுமை செழித்து வளர வந்த பயிர்
எதற்காக வந்ததோ அதற்கான பணியைத்
தொடங்கும் ஆயத்த முயற்சி
பிறந்த பொழுது இங்கு நடப்பது கலியுகம்
கலியுகத்தில் காண்பதுவோ
வலிமிகுந்த சோகம்
உள்ளங்களும் நலிந்து மலிந்து போயிற்று
பள்ளங்களும் பதைபதைப்புகளும் தான்
நாம் காண்பது.
இதைக் காணவா நாம் இந்த அரிய மானிடப்பிற்பை எடுத்தோம்.
பூமித்தாயின் மடியில் பிறந்த நாம்
புனிதர்களாகப் புவிபோற்றும்
மனிதர்களாக அல்லவா நடக்க வேண்டும்
“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்”
இது கண்ணன் தரும் கீதோபதேசத்தின் சிலவரிகள்
அவ்வாறெனில் யோகர் சுவாமிகள் சொன்னது போல
“சும்மாயிரு என்றபடி இருந்து விட்டால்
எல்லாம்? நடக்குமா?”
சிந்திக்க வேண்டிய விடயம் தான்
சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன்
எனவே சிந்தனையின் உச்சமாய்
சீர்திருத்தப் பணிகளைச் செய்ய ஆயத்தமாவோம்
மறுமலர்ச்சி என்னும் அன்புப் பணியை
சுறுசுறுப்பாய் செய்து புதிய பாதைக்கான வழி சமைப்போம்
இளைஞர் யுவதிகளாம் எம் இனக் குழுமத்தை
ஒன்று சேர ஒழுங்கமைத்து, உயர் இலட்சியமாம்
அன்பு தோய் மன்றங்களும் அறச்சாலைகளும்
தெருவு தோறும் தோன்றிடச் செய்திடுவோம்
சீர் திருத்தக் கருத்துக்களை செம்மையுற விளங்க வைத்து
சீர்திருத்தப் பணிகளை சீர் கொண்டு
செயற்பட முனைந்திடுவோம்
விழிப்புணர்வை வீடு வீடாகவும்
வீதி வீதியாகவும் விளங்கவைத்து
விழுமியமாம் நற்பண்புகளெனும்
செழுமைமிகு நீதி, நேர்மை, அன்பு, அகிம்சை,
பொறுமையும், சகிப்புத்தன்மையும் நாட்டின் சிறந்த
கலை கலாச்சாரம் எனும் அத்தனை நற்பண்புகளும் மலர
நறுமணம் வீசும் நல்லதொரு சமூதாயத்தை
விறுவிறுப்புடனும் வேகமுடனும் உருவாக்கி
வீரமுழக்கம் செய்து விழிப்புணர்வை உருவாக்கிட
ஒன்று சேர்வோம் உயர்ந்த வாழ்வு மலர்ந்திட
ஒற்றுமையுடன் ஒன்று கூடுவோம்
இளைஞர் யுவதிகளே ஒன்றாக செயற்பட அணிசேர்வோம்
எழுமின் விழிமின் உடன்வாரீர்
வே.இராமர்
ஓய்வு நிலை அதிபர் கைதடி நாவற்குழி
மறுமொழி இடவும்